Wednesday, June 29, 2011

*உண்மைக்குக் கிடைத்த தண்டனை

டாக்டர் R.K. கந்தசாமி
விடுதி எண்-43 (1950-51)
தபோவன பொதுக்குழு உறுப்பினர்.

1948இல் நான் IV  Form படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை முடிந்து நானும் 108 E.R. குமாரசாமியும் ஹாஸ்டலுக்கு வராமல் திருச்சி சென்று சினிமா பார்த்துவிட்டு இரவு தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை சுவாமியிடம் ஆஜர் கொடுக்க சென்ற போது எப்போது வந்தீர்கள்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டார். நாங்களும் நேற்று இரவு வந்தோம் என்று கூறினோம். நான் பார்க்கவில்லையே என்றார்கள். நாங்கள் திருச்சியில் சினிமா பார்த்துவிட்டு காலதாமதமாக வந்தோம் என்று உண்மையைக் கூறினோம். சுவாமிக்கு கோபம் வந்து இருவருக்கும் 5 ரூபாய் அபராதம் என்று சொன்னார்கள். உடனே 108 E.R. குமாரசாமி சற்றுத் துடுக்காக, "உண்மையைச் சொன்னதற்கு தண்டனையா சாமி?" என்று கேட்டார். அதற்கு சுவாமி உண்மையைச் சொன்னால் தப்பித்துக்கொள்ளலாம் என்றால் நாட்டில் கொலையும், திருட்டும் பெருகிவிடும். நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால் நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள். இரண்டாவதாக இனி அந்தத் தவற்றை செய்யமாட்டாய் என்று பொருள். மூன்றாவதாக இம்முறை செய்த தவறுக்கு தண்டனை ஏற்கத் தயாராய் இருப்பதாகவும் பொருள். உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன என்று கூறி எங்கள் இருவர் சிந்தனையையும் தெளிவடையச் செய்தார்கள். இது இன்று நடந்தது போல் உள்ளது. ஆனால் இது நடந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன.

1 comment:

  1. அருமை....... அழகான பதிவு........ சுவாமிஜி யின் நல்லதொரு தெளிவுரை.....

    ReplyDelete