Friday, July 8, 2011

*ஸ்மரண சுகம்

நெல்லை அரசன் நடேசன்
தபோவன பழைய மாணவர்

1950 என்று நினைக்கிறேன். காவேரி கரைபுரண்டு ஓடுகின்ற மாமரங்களும், தென்னை மரங்களும், பச்சை வயல்களும் செழித்துச் சூழ்ந்த அந்தத் திருப்பராய்த்துறையின் நான் சித்பவானந்த ஸ்வாமிகளைக் கண்டேன். இன்னும் சுவாமிஜி அவர்களின் அந்த கம்பீர உருவமும், கண்டிப்பும், கருணையோடு குழந்தைகளான எங்களோடு குழந்தையாய் ஆடி மகிழ்ந்ததையும், நாங்கள் சேட்டை பண்ணிவிட்டு அவரிடம் வாங்கிய அடியையும் நினைத்துக்கொண்டு அந்த ஸ்மரண சுகத்திலே இருக்கிறேன். 

அதிகாலையில் (நாங்கள் இருக்கும்போது Swimming Pool கிடையாது) ஸ்வாமிகள் எல்லோரையும் குளிக்க காவேரி ஆற்றிற்கு கூட்டிச் செல்வார்கள். சில நேரம் நீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் அங்கும் இங்கும் அவரைத் தேடுவோம். திடீரென்று வெளியே வருவார்கள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் காதை அடைத்துக்கொண்டு எங்கள் நடுவிலே நிற்பார்கள். சிறுவர்களான நாங்கள் 30,40 பேர் இருப்போம். அவர் மேல் தண்ணீரை வாரிவாரி இறைப்போம். பொறுமையாக பல நேரம் அப்படியே  இருப்பார்கள். எங்கள் கை வலிக்கும்வரை நீர் இறைப்போம். நாங்கள் சிறுவர்கள்தானே? 10 அல்லது 11 வயது தான் இருக்கும்; சோர்ந்துவிடுவோம். அப்போது சுவாமி சிறுவர்களான எங்கள் முகத்தில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாங்கள் இங்குமங்கும் ஓடுவோம். சில நேரம் எங்களைத் தூக்கித் தனது திரண்ட முதுகின் மீது வைத்துக்கொண்டு தண்ணீரில் தூக்கிப்போட்டு விடுவார். 'குதி, நீந்தி வா' என்று சொல்வார்கள். இப்படி நீச்சல் சொல்லித்தருவார். இப்படிப் பிரியமாக இருந்தாலும் அதே நேரம் மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார்.

No comments:

Post a Comment