Thursday, December 22, 2011

*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)

அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்

பிறப்பு
மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே ராமச்சந்திர முகோபாத்யாயர் எனும் ஏழை பிராமணர் வாழ்ந்திருந்தார். பஞ்சத்தால் ஒரு தடவை பிரஜைகள் பரிதவித்துக்கொண்டிருந்த பொழுது ராமச்சந்திர முகோபாத்யாயர் தம்மைப் பற்றியும் தமது குடும்பத்தைப் பற்றியும் கவலையில்லாதவராய்த் தன் கைவசமிருந்த தானியங்களையெல்லாம் சிறிது சிறிதாகச் சமைத்து அன்னமளித்துப் பாமரரது பசிப்பிணியைத் துடைக்க முயன்றார். அவருக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாராக வாய்த்தவர் சியாமாசுந்தரி தேவி என்பார். இத்தம்பதிகளுக்குத் தலைபேறாக கி.பி. 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி நம் கதாநாயகி திருமேனி தரிப்பாளாயினள். பெற்றோர் மகவுக்கு சாரதாமணி என்ற நாமகரணம் சூட்டி வளர்த்து வந்தனர்.
குழந்தைப்பருவத்தில், குறிப்பிடத்தக்க செயல் ஒன்றும் சாரதாமணியின் வாழ்க்கையில் சம்பவிக்கவில்லை. கிராமத்துச் சிறுமிகள் இந்தியாவில் எங்ஙனம் வளர்கின்றனரோ, அதே முறையில் இவளும் வளர்ந்து வந்தாள். மரப்பாவைகளிலும், களிமண் உருவங்களிலும் இவளுக்குப் பிரியம். பொம்மைகளைத் தங்கள் குழந்தைகளாகக் கருதுவது சிறுமிகளின் வழக்கம். ஆனால் சாரதாமணி மட்டும் அவைகளை தேவதைகளாகக் கருதி வழிபட்டது அவளுடைய சிறப்பியல்பு என்று சொல்ல வேண்டும்.

அன்னையார் வாழ்ந்த வீடு - ஜெயராம்பாடி.
 பால் மணத்தில் திருமணம்
ஜெயராம்பாடிக்கு அருகில் சிகூர் என்னும் கிராமம் ஒன்று உண்டு. சாரதாமணியின் தாயார் சியாமா சுந்தரி தேவியின் பிறப்பிடமாகும் அவ்வூர். ஆங்கிருக்கும் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவதுண்டு. ஸ்ரீமதி சியாமா சுந்தரி தேவியும் ஒரு வருஷம் தமது செல்வி சாரதாமணியை உடனழைத்துச் சென்றிருந்தார். இச்சிறுமிக்கு அப்போது பிராயம் மூன்று. பாவை போன்று இங்குமங்கும் ஓடி உலவிய சாரதா மணியை மாது ஒருத்தி எடுத்து மடி மீது வைத்து அவளுடன் சல்லாபமாட ஆரம்பித்தாள். பெண்ணைப் பற்றிய பேச்சு என்றால், அல்லது பெண்ணுடன் பேச்சு என்றால், அது பெரும்பாலும் திருமணத்தைப் பற்றிய பேச்சாவதன்றோ நம் தேச வழக்கம். அங்கு குலாவி விளையாடிய இளைஞர்களைக் காட்டி “குழந்தாய், இவர்களுள் நீ யாரை மணந்துகொள்வாய்? சுட்டிக்காட்டு பார்ப்போம்” என்றாள் மங்கை. விவாஹம் என்றால் இன்னதென்று அறியாத சிறுமியின் மெல்லிய சுட்டுவிரல் அங்கே சத்காலக்ஷேபம் நடைபெறுவதைப் பார்க்க வந்திருந்த, விபரீத மனப்போக்கை உடைய, சிந்தனையில் ஆழ்ந்திருந்த கதாதரனைக் குறிப்பிட்டது. ஆனால் விளையாட்டாக நிகழ்ந்த இச்சம்பவம் காலக்கிரமத்தில் சத்திய சங்கற்பமாக முடியப்போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திலர்.
ஜெயராம்பாடிக்குத் தென்கிழக்கே சுமார் மூன்று மைல் தூரத்தில் கமார்புகூர் எனும் கிராமம் ஒன்று உண்டு. அது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரது ஜன்ம ஸ்தலமாகும். கதாதரர் என்னும் பிள்ளைத் திருநாமம் படைத்திருந்த அவர் கல்கத்தா நகருக்கு அருகில் தக்ஷிணேசுவர ஆலயத்தில்  காளிகாதேவிக்கு அர்ச்சகராக அமர்ந்திருந்தார். இவரது விசித்திரமான மனப்போக்கை காணலுற்றவர்கள் இவரை ஒரு பைத்தியக்காரர்  என்று முடிவு கட்டினார்கள். அவரைப் பிடித்திருந்தது அருட்பித்து என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. இச்செய்தி நாளடைவில் கமார்புகூருக்கு எட்டியது. கதாதரரைப் பெற்று வளர்த்த தாய் ஸ்ரீ சந்திரா தேவியாரது மனத்தை இது எவ்வளவு புண்படுத்தியது என்பது சொல்லாமலே விளங்கும். குடும்ப காரியங்களைப் பற்றியாவது அல்லது வேறு எந்த லௌகீக விஷயங்களைப் பற்றியாவது கதாதரர் கவலை எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு பரிகாரமாகக் குடும்ப பாரத்தை அவர் மீது சுமத்த வேண்டும். இதற்கு உற்றதும் உறுதியானதுமான வழி, விவாகம் செய்து வைப்பது ஒன்றே என்று முடிவு கட்டப்பட்டது. ஒருவேளை இளைஞர் இடைஞ்சல் ஏதாவது செய்வாரென்று எண்ணி அவர்கள் இரகசியமாக ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் அன்னையின் துயரமறிந்து அதைத் துடைக்க விரும்பிய கதாதரர் ஒரு நாள் ஒருவித பரவச நிலையடைந்து, “ஏன் இங்குமங்கும் வீணே தேடியலைகின்றீர்கள்? ஜெயராம்பாடியிலே ராமச்சந்திர முகோபாத்யாயர் வீட்டிலே எனக்கென்று ஏற்பட்டுள்ள பெண் ஒருத்தி இருக்கிறாள். அங்கு செல்லுங்கள்” என்றார்.
ராமச்சந்திர முகோபாத்யாயரும் முதலில் சிறிது மறுதலித்துப் பிறகு பெண் கொடுக்க ஒருவாறு ஒத்துக்கொண்டார். அப்பொழுது சாரதாமணிக்கு வயது 6; வரனுக்கோ வயது 24. பொருத்தமற்ற அச்சம்பந்தம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. ஆயினும் வேறு எங்கும் பெண் அகப்படாமையால் அவர்கள் அரைமனதாக அதற்கு ஒருப்பட்டனர். 1859ஆம் ஆண்டு மே மாதத்தில் சுபமுகூர்த்தமொன்றில் ஜெயராம்பாடியில் சாரதாமணிதேவி வைதிக விதிப்படி கதாதர சட்டோபாத்யாயருக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப்பட்டாள்.
காலச்சக்கரம் சுழல்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்தில் கடுந்தவம் புரிகிறார். தம் உடலைப் பற்றிய உணர்ச்சி அவருக்கில்லை; பின்பு உறவினரைப் பற்றி எண்ணுவது எங்ஙனம்? அவர் மனத்தகத்தை விட்டு இளம் மனையாள் அடியோடு மறைந்து போய்விட்டாள்!
இங்ஙனம் இன்னும் 7 ஆண்டுகள் கழிகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மறுபடியும் கமார்புகூர் வந்திருக்கும் செய்தி சாரதா தேவிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவளுக்கு அப்பொழுது வயது பதினான்கு.  தன் கணவரைக் காணவர வேண்டுமென்று வேண்டப்பட்டபொழுது அவள் மகிழ்வுடன் இசைந்து சென்றாள். பரமஹம்ஸர் அன்புடன் அவளை வரவேற்றார். கடவுளை வழிபடுவது ஒன்றே பிறவிப்பயன் என்று அவர் அந்த இளமங்கைக்கு எடுத்தோதினார்.  அவளுடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாவதற்கு இதுவே முதல் காரணமாயிற்று. இதைக் குறித்துப் பிற்காலத்தில் ஸ்ரீ சாரதா தேவியார் தம் சிஷ்யர்களுக்குப் பகர்ந்ததாவது: “அப்போது பேரானந்தம் நிறைந்த பூரண கும்பம் ஒன்று என் உள்ளத்தில் வைக்கப்பட்டது போன்று நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் மாறாது என் மனத்தகத்துக் குடிகொண்டிருந்தது. இந்த அனுபவத்தைச் சொல்லால் விளக்குவது எளிதன்று.”


கணவரை நாடி காளிகோயில் ஏகுதல்
“ஒருவருக்கும் விளங்காத வார்த்தைகளை சாரதையின் புருஷர் பிதற்றுகிறார். சில சமயங்களில் ‘தாயே, தாயே’ என்று சொல்லிக்கொண்டு தரித்திருக்கும் உடையை நழுவ விட்டு நிர்வாணியாகத் திரிகிறார். ஆடுவது, பாடுவது, அசையாது கிடப்பது – இவை போன்ற விபரீதச் செயல்களைச் சில வேளைகளில் செய்கிறார்”. கிராமவாசிகள் இவ்வாறெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவளுக்கோ எதையும் மறுத்துச் சொல்ல நா எழாது. மௌனமாய்ச் சும்மா இருப்பதைத் தவிர வேறு என் செய்வாள்!
கடைசியாக தக்ஷிணேசுவரத்துக்குச் சென்று தற்கொண்டாரது நிலைமையை நேரில் காண்பதே உசிதமென்று மாதரசி முடிவு கட்டினாள். 1872ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பயணத்துக்கு நல்ல நாள் ஒன்று குறிப்படப்பட்டது. அக்காலத்தில் அப்பக்கங்களிலிருந்து கல்கத்தாவுக்கு இருப்புப்பாதை கிடையாது. வண்டி அல்லது பல்லக்கில் சென்றால் பணச் செலவு அதிகம். குடும்ப வருவாய் அதற்கு இடந்தரவில்லை. எனவே தந்தையும் மகளும் கால்நடையாகப் புறப்பட்டனர். முதல் இரண்டு நாட்கள் பயணம் இனிது நடைபெற்றது. ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக மூன்றாம்நாள் பிரயாணத்துக்கு ஒரு விக்கினம் விளைந்தது. தொடர்ந்து நெடுந்தூரம் நடக்கும் பழக்கத்தை சாரதை இதுபரியந்தம் பெற்றிருந்தாளில்லை. ஆயாசத்தால்  அவளுக்கு ஜுரம் வந்துவிட்டது. எனவே அவர்கள் ஒரு சத்திரத்தில் தாமதிக்க நேர்ந்தது. உடல் நலன் பெறுமுன் புறப்படுவது உசிதமன்று. விரைந்து செல்ல விரும்பிய மாது தங்களுக்கு உற்ற தடையை எண்ணித் தவித்திருந்தாள். ஆயினும் அவ்வல்லலுக்கிடையில் ஆறுதல் அளிக்கும் தெய்விகக் காட்சியொன்றை காணாலானாள். அதைப்பற்றி அவள் பிற்காலத்தில் பகர்ந்ததாவது:- “நான் பிரக்ஞை இழந்தவளாய்ப் படுக்கையில் படுத்துக் கிடந்தேன். அப்பொழுது இளமங்கையொருத்தி என் அருகில் வந்து உட்கார்ந்தாள். கார்வண்ண மேனியாள் எனினும் அவளுடைய கட்டழகை என்னென்பது! நான் என்றைக்கும் மறவாவண்ணம் அவளுடைய திருவுருவம் என் மனதிற் படிந்தது. அண்டையில் அமர்ந்த அவள் தன் மெல்லிய குளிர்ந்த கரத்தால் என் சிரசைத் தடவினாள். அதன் பயனாக என்னை வாட்டிய வலியும் வெப்ப நோயும் உடனே நீங்கலாயின. நோயுற்றுக் கிடந்த எனக்கு ஆறுதலும் அமைதியும் உண்டாயின. ‘அக்கா, நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று நான் அவளைக் கேட்டேன்.
        ‘தக்ஷிணேசுவரத்திலிருந்து வருகிறேன்’ என்றாள் காட்சியில் தென்பட்டவள். பேச முடியாதவாறு எனக்கு பெருவியப்பு உண்டாயிற்று. மேலும் நான் பகர்ந்தாவது:
         ‘தக்ஷிணேசுவரத்திலிருந்தா? நான் அங்குச் சென்று என் கணவரைக் காண ஆவலுற்றிருக்கிறேன். ஆனால் இப்பிணி என் இச்சைக்கு இடைஞ்சல் விளைவித்துவிட்டது’.
             ‘கவலைப்படாதே. நீ விரைவில் குணமடைந்து தக்ஷிணேசுவரம் ஏகி உன் கணவனைக் காண்பாய். அவன் என் பக்தன்’.
             ‘அப்படியானால் நீ யாரோ?’ என்று கேட்டேன்.
        ‘நான் தக்ஷிணேசுவரத்தில் வீற்றிருப்பவள். உன் கணவனைக் காத்தருள்பவளும் நானே’ என்றாள் தெய்வத்தன்மை வாய்க்கப்பெற்ற அம்மாது.
      ‘ஆகையால் அல்லவோ நீ கிருபை கூர்ந்து என்னிடத்தில் வந்துள்ளாய்’ என்று நான் அவளுக்கு நன்றி கூறிவிட்டு நித்திரை போய்விட்டேன்.
   ஆத்ம ஞானத்துக்கு ஏதுவான உபதேசங்களை ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து தனக்கு வயது பதினான்கு ஆயிருந்தபொழுதே சாரதாமணி பெற்றிருந்தாள் எனினும் இதுவே அவளுடைய முதலாவது ஆத்மிக அனுபவம் என்று சொல்ல வேண்டும்.
           ராமச்சந்திர முகோபாத்யாயர் அதிகாலையில் எழுந்திருந்தார். தம் புதல்வி குணமடைந்து  நலமுற்றிருப்பதைக் கண்டார். இனி, வசதியில்லாத சத்திரத்தில் வீணாய்த் தங்கியிருப்பதில் பயனில்லை என்றெண்ணி, மேலும் வழி நடக்க ஆரம்பித்தார். அவர்கள் கொஞ்சதூரம் போனதும் சிவிகையொன்று சொற்ப வாடகைக்கு அகப்பட்டது. சாரதையும் அதில் ஊர்ந்து தக்ஷிணேசுவரம் போய்க் கொண்டிருந்தாள். சிறிது சிறிதாக வழியைக் கடந்து இரவு ஒன்பது மணிக்குத் தந்தையும் மகளும் தக்ஷிணேசுவரம் போய்ச் சேர்ந்தனர்.
        மாமியார் சந்திராதேவி வசித்திருந்த சிற்றறைக்கு போவதற்குப் பதிலாக, அவள் நேராக அவரிருக்குமிடம் சென்றாள். எத்தகைய வரவேற்பு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தது! அது சாரதா தேவியின் சொந்த மொழியிலேயே வெளியாவது நன்று:- “நான் அவருடைய திருவடிகளில்  சென்று வணங்கினேன். ‘ஆ, வந்துவிட்டாயா! மிக நன்று’ என்றார் அவர். தரையில் எனக்கு ஒரு பாய் விரிக்கும்படி அங்கிருந்தவர்களிடம் அவர் சொன்னார். ‘மதுரநாதர் இப்பொழுது உயிரோடிருந்திருப்பாராயின் உனக்கு எவ்வளவு சௌகரியம் செய்து வைத்திருப்பார்!’ என்று இயம்பிச் சிறிது வருந்தினார். ஆனால் எனக்கோ ஆட்கொண்டவருடைய கருணை ஒன்றே போதுமானதாயிற்று. வேறு எதையும் நான் உலகில் எதிர்பார்க்கவில்லை’.
           ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவாகம் பண்ணியிருந்ததைக் கேள்விப்பட்ட அவருடைய குருநாதர் தோதாபுரி எனும் பெரியார் அதைப் பற்றி ஆக்ஷேபம் ஒன்றும் செய்யவில்லை. பிரம்மஞானத்தில் நிலைப்பெற்றவருக்குப் பெண் ஒருத்தியால் பாதகம் ஏற்படுவதில்லை. சாதன தசையில் இருப்பவரே ஆண், பெண் வேற்றுமையை முறையாகக் கவனித்து ஒழுகவேண்டும். ஆனால் பிரம்மஞானியோ இந்த வேற்றுமை உணர்ச்சியைக் கடந்தவனாகிறான். 

ஞானத்தாயின் பதவியைப் பெறுதல்
    முதிர்வேனிற் காலத்தில் ஒரு வைகாசிப் பௌர்ணமியன்று நிறை நிலாவின் வெள்ளி வெளிச்சம் உலகைக் குளிப்பாட்டுகிறது. அன்று ‘பவஹாரிணி காளிகா’ பூஜை எனும் திருவிழா நடைபெறுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அறையிலும் வழிபாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் ஆய்க்கொண்டிருக்கின்றன. சகதர்மிணி ஸ்ரீ சாரதா தேவியார் மட்டும் அவருடன் அறையில் இருக்கிறார்.

           முதல் ஜாமத்தில் பூஜை ஆரம்பித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கிழக்கு முகமாக அமர்ந்து, ஆரம்ப சடங்குகளைச் செய்து முடித்தார். அவருக்கு எதிரே அன்னை பராசக்தியை எழுந்தருளப் பண்ணுவதற்காக ஒரு பீடம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஸ்ரீசக்கரமும் வரையப்பட்டிருந்தது. அகிலாண்ட நாயகிக்காக அமைக்கப்பட்டிருந்த பீடத்தின்மீது வீற்றிருக்கும்படி ஸ்ரீ சாரதா தேவியை பரமஹம்சர் வேண்டினார். பரவசநிலை எய்தியிருந்த அன்னையும் அதில் அமர்ந்தார். பின்பு ஷோடசோபசார பூஜை என்ற பதினாருவிதமான சடங்குகளை உடைய வழிபாட்டை அத்திருமேனியின்  வாயிலாகப் பரமேசுவரிக்குச் செய்து முடித்தார். அத்திருமேனியின் வாயிலாகத் திகழ்ந்தது ஜகதீசுவரி என்றே சொல்ல வேண்டும். பூஜை முடிவு பெறும்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சமாதியில் மூழ்கிவிட்டார். உடலங்கள் இரண்டும் அசைவற்று அமர்ந்திருக்கையில் வணங்குபவர், வணங்கப்படுபவர் ஆகிய இருவரும் அகண்டசச்சிதானந்த சொரூபிணியாகிய பராசக்தியின்கண் லயித்துவிட்டனர். மூன்றாம் ஜாமத்தில் பரமஹம்சர் கொஞ்சங் கொஞ்சமாக வெளியுலக ஞாபகம் வந்தது. அன்று ஒருநாள் செய்த பூஜா பலன் மட்டுமல்லாது ஆயுள் முழுதும் தாம் செய்த கடுந்தவம், அத்வைத சித்தி உள்படத் தாம் அடைந்திருந்த ஞானநிலை, தமது உடல், உயிர் அடியோடு ஒப்படைத்தார். அதற்கு அறிகுறியாகத் தமது ஜபமாலையைத் தேவியின் திருவடியில் வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

ஞானத்தாயின் பதவியைப் பெறுதல்

நலமும் பொலமும் கூடிய நிகழ்ச்சிகள்
        தக்ஷிணேசுவரத்தில் ஸ்ரீ சாரதா தேவியார் சுமார் 15 வருஷகாலம் வாழ்ந்திருந்தார். 1874ஆம் வருஷம் மார்ச் மாதம் தம் கிராமத்துக்குப் போயிருந்தபோது பிதா காலஞ்சென்றுவிட்டார். ஒரு வருஷத்துக்குப் பிறகு தக்ஷிணேசுவரத்தில் வசித்திருக்கையில் சாரதா தேவியாருக்கு வயிற்றுக்கடுப்பு உண்டாயிற்று.  சிகிச்சைகள் பல கையாளப்பட்டன. நோய் குணமடைவதற்குப் பதிலாக அதிகரித்தது. பின்பு உடல் நலிவு ஒருவாறு ஒழுங்குபட்டதும் தம் கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். அன்னையின் பராமரிப்பில் இருந்தபோது சாரதா தேவிக்கு அக்கொடிய நோய் மீண்டும் ஒருமுறை வந்துவிட்டது. அகப்பட்ட ஔஷதங்களையெல்லாம் கையாண்டு பார்த்தனர். நோய் மட்டும் தீர்ந்தபாடில்லை. தப்பிப்பிழைப்பது கடினம் என்றனர் பலர். சாரதா தேவியின் மனத்தில் ஒருநாள் திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது. யாரிடத்திலும் ஒன்றும் சொல்லாது அவர் அக்கிராமத்தில் எழுந்தருளியிருந்த சிம்மவாஹினி தேவியின் சந்நிதிக்குச் சென்று, ‘ஹத்ய’ விரதம் எடுத்துக்கொண்டார். தெய்வாதீனமாக சிகிச்சை ஏற்படாவிட்டால் பட்டினி கிடந்து மாய்வது அவ்விரதத்தின் நோக்கமாகும். கோயில் வாயிலில் படுத்துக்கிடந்த அவருடைய உடல்நிலை மேலும் விரைந்து கேடடைந்து வந்தது. வயிற்றுக்கடுப்புடன் உடலும் வீங்குவதாயிற்று. கண்ணிலும் மூக்கிலும் சதா நீர் வடிந்துகொண்டிருந்தது. கண் பார்வையும் மங்கிவிட்டது. அந்நிலையிலும் அம்பாள் திருவுளப்படி ஆகுக என்று அவர் அமைதியுற்றிருந்தார். இரண்டுவித சிகிச்சைகளை தேவி கனவில் தோன்றி சொல்லியதாகவும், அவைகளைக் கையாண்ட சொற்ப நாளில் உடல் நலனுற்றதாகவும் அவர் பிற்காலத்தில் தெரிவித்தார்.
        ஜெயராம்பாடியில் நவமுகர்ஜி என்னும் பிராமணர் வருஷந் தோறும் தேவி பூஜையைச் சிறப்பாகச் செய்து வந்தார். சியாமா சுந்தரி கூலி வேலை செய்து கொஞ்சம் நெல் சம்பாதித்து அப்பூஜைக்குக் கைங்கரியமாகக் கொடுப்பார். ஏதோ ஒரு சச்சரவை முன்னிட்டு ஒரு வருஷம் நவ முகர்ஜி நெல்லை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவ்வம்மையார் இரவெல்லாம் அழுது புலம்பிக்கொண்டிருந்தபொழுது தேவி ஜகதாத்திரி அம்மாதின் முன்னிலையில் பிரசன்னமாகி, சக்திக்கு ஏற்றவாறு வீட்டிலேயே தேவி பூஜை செய்யவேண்டுமென்று அனுக்கிரகித்தாள்.  அதுமுதல் வருஷந்தோறும் சியாமா சுந்தரி அம்மையாரது இல்லத்தில் தேவி பூஜை எளியமுறையில் நடைபெறுவதாயிற்று. சாரதா தேவி அப்பூஜையின் பொருட்டு பிறந்த கிராமத்திற்குப் போவதுண்டு. பிற்காலத்தில் இக்கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஸ்தாபனமானது இப்பூஜையை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்து வருகிறது.

    1877ஆன் ஆண்டு மாமியார் ஸ்ரீமதி சந்திராதேவி தக்ஷிணேசுவரத்தில் காலமாய்விட்டார். 1881 ஆம் வருஷம் தாயாருடன் கிராமத்திலிருந்து சாரதா தேவி திரும்பி வந்தார். அப்பொழுது ஹிருதயர் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்தை மகன்) அவர்களை அவமானப்படுத்தி அங்கிருந்து விரட்டியோட்டிவிட்டார். இறுமாந்திருந்த ஹிருதயர் அன்னையாரிடத்து அவமரியாதையாக நடந்து கொண்டதைப் பார்த்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிக வருந்தினார். பிறகு சொற்ப நாளைக்குள் கோயில் அதிகாரிகள் ஹிருதயர் மீது அதிருப்தியடைந்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள். அதிலிருந்து அவருடைய நற்காலம் போய்விட்டது.  பலவிதமான துன்பங்களுக்கு ஹிருதயர் ஆளானார். இதைப்பற்றி பரமஹம்சர் முன்னமே எச்சரிக்கை செய்திருந்தார். “நீ என்னிடத்தில் அவமரியாதையாய் நடந்துகொள்வதில் குற்றமில்லை. ஆனால் அவள் மனம் புண்படும்படிச் செய்வாயானால் அதனால் உனக்குண்டாகும் கேட்டை மும்மூர்த்திகளும் விலக்க முடியாது. ஜாக்கிரதையாயிரு” என்றார். அக்கூற்று இப்பொழுது முழுதும் நிரூபிக்கப்பட்டது. பரமஹம்சருக்குத் திருத்தொண்டு செய்துகொண்டு உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஹிருதயர் பின்பு துன்பம் நிறைந்த கீழ்மகன் ஆய்விட்டார்.

தற்கொண்டார் திருமேனி துடைத்தல்
        ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு உண்டாயிருந்த தொண்டை வலிக்குச் சிகிச்சை செய்தற்பொருட்டு அவர் 1885ஆம் ஆண்டில் பிற்பகுதியில் கல்கத்தாவில் சியாம்புகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலான மருத்துவ முறையும் பாங்குடைய பராமரிப்பும் கையாளப்பட்டன. எனினும் பரமஹம்சருடைய நோய்மட்டும் குணமடையவில்லை. அன்னையார் தாரகேசுவரர் சந்நிதிக்குச் சென்று அவரது நோய் ஒழியும் வரை குறையிரப்பதாகத் தீர்மானித்து அன்னபானமில்லாது தொடர்ந்து இரண்டு நாட்கள்  சிவபெருமான் சந்நிதியில் வீழ்ந்து வழுத்திய வண்ணமாயிருந்தார். 2ஆம் நாள் ஒரு அதிசயம் கண்டார். அடுக்கு அடுக்காக வைத்திருந்த மட்பாண்டங்களை யாரோ ஒருவர் உடைப்பது போன்று அவருக்குத் தென்பட்டது. உடனே உள்ளத்தில் ஓர் உயர் ஞானமும் ஒளிர்ந்தது. அழியும் உடலை அழியாதிருக்கச் செய்ய யாருக்குத்தான் இயலும்! ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம் உடலை உகுக்கும் காலம் அணுகியது. 1886ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில்  அண்ணல் ஊன் உடல் நீத்துப் பேரொளியில் புகுந்தார். ஹிந்து லௌகிகத்துக்கு ஒப்ப விதவை வேடம் பூண அவர் முற்பட்டார். அதற்கேற்ற சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பரமஹம்சரது திருக்காட்சி திடீரென்று அவர் முன் தோன்றிற்று. “நீ யாது செய்கின்றாய்? நான் மாய்ந்து போய்விடவில்லையே! ஓர் அறையினின்று மற்றோர் அறைக்குப் போனது போன்றிருக்கிறது நான் இப்போது அடைந்துள்ள நிலை. இத்தகைய கைம்பெண் கோலம் எதற்காக?”என்றார். இந்த அனுபவத்தால் அன்னையும் அளவற்ற ஆறுதல் அடைந்தார். பிறகு அவர் ஆயுள் முழுதும் சுமங்கலியின் சின்னங்கள் சிலவற்றை அணிந்திருந்தார்.

பரமஹம்சருக்கு பணிவிடை செய்யும் அன்னையார்

தீர்த்த யாத்திரை
        1910ஆம் ஆண்டு அன்னையாரும் மற்றும் ஒன்பது பேரும் பிப்ரவரி மாதத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். சென்னை மடத்து ஸ்தாபகராகிய ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அவர்களுக்கு நல்வரவளித்து சுமார் ஒரு மாதம் அன்னையார் தங்கியிருக்க வேண்டுமென்றார். அன்னையாரும் அங்கு வசித்து அவ்விடத்தைப் புனிதப்படுத்தினார். அதுபோழ்து பலபேருக்கு அவர் மந்திர தீக்ஷையும் செய்து வைத்தார். சென்னையிலிருந்து ராமேசுவரத்திற்கு அன்னையார் சென்றார். வழியில் மதுரையில் ஒரு நாள் தங்கியிருந்துவிட்டு ராமேசுவரம் சேர்ந்தனர். தமது மாமனார் க்ஷுதிராம் சட்டோபாத்யாயரின் அருஞ்செயலை எண்ணி அன்னையார் பெருவியப்படைந்தார். பிரயாண வசதியொன்றும் இல்லாதிருந்த காலத்து அப்பெரியார் 1500 மைலுக்கு மேல் நடந்து வந்து இந்த க்ஷேத்திரத்தில் ராமேசுவரர்  தரிசனம் செய்தார். இது பரமஹம்சர் பிறப்பதற்குச் சில வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. விவேகானந்த சுவாமிகளின் பக்தராகிய ராமநாதபுரம் மகாராஜா, அன்னையார் இடைஞ்சல் ஒன்றுமின்றி ராமேசுவர தரிசனம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். தென்னிந்தியாவின் ஆலயங்களில்  கர்ப்பக்கிருகத்துக்குள் அர்ச்சகரைத் தவிர பிறர் போகலாகாது என்பது ஐதிகம். அன்னையார் ஒருவர் மட்டும் உள்ளே சென்று அர்ச்சிக்கலாமென்று அனுமதிக்கப்பட்டார். அவரும் மூன்று நாள் ராமேசுவரர் பூஜையைத் தாமே செய்தார்.

நகரத்திலும் நாட்டுப்புறத்திலும்

 
        “இந்தத் தேகம் ஒடுங்கிய பின்பு நீ கமார்புகூர் சென்று ஆங்கு எளிதில் அகப்படுவதைப் புசித்துவிட்டு ஈசுவர நாமத்தை உச்சரித்துக்கொண்டு காலங்கழிப்பாயாக” என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அன்னையாருக்குப் பகர்ந்திருந்தார். அக்கட்டளையை நிறைவேற்ற கமார்புகூர் சென்று வசித்திருந்தார். 1912ஆம் வருஷம் அன்னையாரின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்ததும், கஷ்டம் நிறைந்ததுமான காலம் இப்பொழுது தோன்றுவதாயிற்று. யாது காரணத்தாலோ சிஷ்யர்களுக்கும் அவருக்கும் சொற்பகாலத்துக்குத் தொடர்பு அற்றுப்போய்விட்டது. கைம்பெண் ஒருத்தி கையில் வளையணிந்து வந்திருக்கிறாள் என்று கிராமவாசிகள்  பரிகாசம் பண்ண ஆரம்பித்தனர். அணியைக் கழற்ற முயன்றபோது பரமஹம்ஸர் மீண்டும் தரிசனம் கொடுத்து அப்படி செய்யலாகாது என்று இயம்பினார். உற்றார் உறவினர் ஒருவரும் இப்பொழுது கமார்புகூரில் இல்லை. ஜீவனோபாயத்தை முன்னிட்டு அவர்கள் எல்லாரும் கல்கத்தாவுக்குப் போய்விட்டனர். வீட்டில் இருக்கும் நெல்லைக் குத்தித் தாமே சமைக்கவும், காட்டுக்கீரையை அவித்து வைத்துக்கொள்ளவும் செய்தார். உப்பு வாங்குவதற்குக் கையில் காசு இல்லாது போன நாட்களும் உண்டு. வறுமை நோய் வந்து அவரை வாட்டியது பெரிதன்று. அதைப்பற்றி அவர் யாரிடத்திலும் பகராதும் தாமே மனம் சலித்துக்கொள்ளாதும் அமைதியுற்றிருந்ததே ஆச்சரியம்.

        
   ஒரு வருஷத்துக்குப்பின்  அன்னையாரின் வறுமை பற்றி கல்கத்தாவுக்கு எட்டிற்று. தங்கள் அருள் அன்னையாரைக் கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போக ஒரு சிறு கூட்டம் கமார்புகூருக்கு வந்தது. அதைப் பார்த்த ஊரார் “வேற்றார் சிலருடன் விதவை ஒருத்தி வெளியூருக்குப் போவது தகுமோ?” என்று ஆக்ஷேப்பித்தனர். பரமஹம்சருடன் சிறு வயதில் கூடி விளையாடிய சில கிழவிமார்கள், “கதாயின், பெண்டாட்டி சாமானியமானவள் அல்லள். கதாயைப் போன்றே அவளும் தெய்வத்தன்மை வாய்ந்தவள். அவள் விஷயத்தில் ஒன்றும் குறை கூறாதீர்கள்” என்று எதிர்ப்பிரசாரம் செய்தனர். தமது தாயாரிடமும் உத்தரவு பெற்று கல்கத்தா சென்றார். அவருடைய வறுமை நீங்கிற்று. கல்கத்தா வந்த பின்பு தாம் பிறந்த ஊராகிய ஜெயராம்பாடிக்கு அடிக்கடி போய்விடுவார். 6 மாதம் நகரத்திலும், அடுத்த 6 மாதம் நாட்டுப்புறத்திலும் கழியும். அதற்குள் அன்னையாரின் ஆத்மிகப் பெருவாழ்வு பரிபூரண நிலையை அடைந்து வந்தது. குருதேவரைப்போன்று அவரும் அடிக்கடி சமாதிநிலை எய்துவது சர்வ சாதாரணமாயிற்று.
        சுடர் விளக்கு ஒன்று எரியும்போது அதன் ஒளி நாலா பக்கமும் பரவுகிறது. ஆனால் தீபத்துக்கு நேர் கீழ்பக்கமோ இருள் சூழ்ந்து கிடக்கும். இந்த உபமானம் நம் ஞானத்தாயின் உடலோடு ஒட்டிய உறவினர்க்கு முற்றும் பொருந்தும். தம்பிமார் நால்வருள் எல்லார்க்கும் இளையவர் அபய சரணர் என்னும் பெயர் பூண்டிருந்தவர் போதிய அளவு கல்வி பெற்ற மிக்க அறிவாளி. அவருடைய குமாரத்தி ராதை கர்ப்பத்தில் இருந்தபொழுதே அபயசரணர் காலமாய்விட்டார். மற்ற 3 சகோதரர்களும் பேராசைக்காரர்கள். வாழ்க்கையில் வெற்றி என்பதை அவர்கள் அறிந்திலர். தமக்கை சாரதா தேவியாரின் பராமரிப்பில் வளர்ந்தவர்கள். வயது வந்த பிறகும் தமக்கையாரின் தெய்வத்தன்மை பற்றி ஒன்றும் தெரியாது. தங்களுக்குத் தேவையான பொருளை தேடித்தர வேண்டுமென்று தமக்கையாரை உபத்திரவப்படுத்துவதே அவர்களின் தொழில். உடன் பிறந்தவளுடைய உதாரகுணத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் மூவர்க்கிடையிலும் ஓயாத போட்டி வந்துவிடும். அவளிடமிருந்து அகப்பட்ட பொருளைப் பங்கிட்டுக்கொள்ளுதலில் சண்டை மூண்டுவிடும். சில வேளைகளில் கை கலக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள். கிராமத்தில் தங்கள் ஞானத்தாயிடமிருந்து அருளமுதைப் பெறச் சென்றிருந்த சிஷ்யர்களுக்கெதிரிலும் இத்தகைய போராட்டங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அமைதியே வடிவெடுத்த அன்னையார் சாந்தமாக அவர்களுக்கு சமாதானம் சொல்லுவார்.
        ஜெயராம்பாடிக்குச் சென்றிருந்தபொழுதல்லாம் தம்பிமார்களின் குடும்பங்களிலிருந்த அலங்கோலங்களைக் கண்டு சகியாதவராய் அவர்களின் மனைவிமார்களுக்கு உதவிபுரிய அன்னையார் முற்படுவார். திக்கற்றவர்கள் போல் திரிந்த கொழுந்திமார்களின் குழந்தைகளை இவர் பரிந்தெடுத்துப் பராமரிப்பார். அத்தையார் காட்டிய அன்புக்கு வசப்பட்ட சிசுக்கள் சொந்தத் தாய்மார்களைத் துறந்துவிட்டு இவரிடம் வந்துவிட்டன. நாட்டுப்புறமானாலும், நகர்புறமானாலும் அத்தையார் சென்றவிடத்துக்கே மூன்று சிறுமிகளும், ஒரு சிறுவனும் உடன் செல்வார்கள். அப்படி அத்தையாரால் ஆதரிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியுற்று வாழ்வதற்குப் பதிலாக ஓயாது அவருக்கு உபத்திரவம் கொடுத்துக்கொண்டேயிருந்தன. போதாதற்கு அக்குழந்தைகள் அடிக்கடி பிணியால் நைந்து வருந்திக் கொண்டிருந்தன. காலஞ்சென்ற கடைசித் தம்பி அபயசரணரின் மனைவிக்கு ஒருவாறு பைத்தியம் பிடித்துக்கொண்டது. அவளையும், அவளுடைய குழந்தை ராதையையும்  ஆதரிப்பது அன்னையாரின் கடமையாயிற்று. பைத்தியக்காரி ஏதோ சில வேளைகளில் மட்டும் அன்னையாருக்கு உபத்திரவம் கொடுப்பாள். ஆனால் ராதை செய்த தொந்தரவோ ஓயாதது. பராமரிப்புக்குக் கைம்மாறாக அன்னையாருக்கு அடியும், திட்டும், உதையும், கிள்ளும் மாறி மாறி ராதையிடத்திருந்தும் மற்ற சிறுமிகளிடத்திருந்தும் வந்துகொண்டிருக்கும். “உங்கள் மாமா என்னை எவ்வாறு மேன்மைப்படுத்தினார்! நீங்கள் எவ்வாறு என்னைக் கீழ்மைப்படுத்துகின்றீர்கள்!” என்று சிறிதும் மனம் சலியாது அவர் இருதரச் செயல்களையும் சீர்தூக்கிக் காட்டுவார். தமது அத்தையார் படைத்திருந்த பொறுமை பூமாதேவியின் பொறுமையைவிடப் பெரியது என்று உலகுக்கு விளக்கிக் காட்டுதற்கே ராதை எனும் சிறுமி ஒரு பிசாசின் இயல்புடன் பிறந்து நம் அருள் அன்னையிடம் வந்து சேர்ந்தாள் போலும்!
       அன்னையார் தன்னந்தனியாகக் கமார்புகூரில் வாழ்ந்திருந்தபோது, ஹரீசன் என்பவன் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். தன்னை பரமஹம்சருடைய பக்தன் என்று சொல்லிக்கொண்டு சில துராசாரங்களில் ஈடுபட்டவன். பரமஹம்சர் தன்னிடத்து ஆவிர்பவித்துத் தன்னை ஆட்டி வைப்பதாகச் சொல்லிக்கொண்டு பரவச நிலையில் தான் இருப்பதாகவும் அன்னையாரின் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் பாசாங்கு பண்ணிக்கொண்டு அவன் அவரைத் தாக்க வந்தான். அன்னையாரோ ஒரு குதிருக்குப்ப் பின்புறம் ஓடித் தப்பிக்க முயன்றார். ஹரீசனும் அவரைத் துரத்திக்கொண்டே ஓடி வந்தான். பல தடவை குதிரைச் சுற்றிச்சுற்றி ஓடிச் சலித்துப்போன அன்னையார் பேதை போன்று பொறுத்திருத்தல் தகாதென்றெண்ணி, திடீரென்று திரும்பி அவனை வலிந்து காலால் உதைத்தார். திருகிக்கீழே வீழ்ந்தான் கெட்ட கருத்துடைய வேஷதாரி. வீராவேசத்துடன் அவனது நெஞ்சின்மீது ஒரு காலை நாட்டி நின்றுகொண்டு அன்னையார் அவனது முகத்தில் நையப்புடைத்தார். ஓயாது விரைந்து வீழ்ந்த அடியைப் பொறுக்க முடியாமல் அவன் நடுநடுங்கினான். தப்பித்தால் போதுமென்று அவன் மனங்கலங்கிக் கிடந்தபொழுதே அறைவதை அன்னையார் நிறுத்தினார். அமைதியும் நாணமும் வடிவெடுத்திருந்த அன்னையார் அதுபோன்ற ஆபத்து வேளைகளில் வீரலக்ஷ்மியின் வடிவெடுக்கவும் வல்லவராயிருந்தார். ஆடவருடைய உதவியையே யாண்டும் எதிர்பார்த்து நிற்கும் இக்காலத்து இந்திய மகளிர்க்கு அன்னையாரின் இச்செயலில் அரிய பாடம் ஒன்று கற்றுக்கொள்ளக் கிடக்கிறது. பலமின்மையையும் பயங்கொள்ளித்தனத்தையும் பெண்மையோடு பொருத்தி வைக்கலாகாது. வேண்டியபொழுது வீரவெறி வகிக்கவல்ல வன்மையும் சம்யோசித புத்தியும் பெண்டிர்களுக்கு இன்றியமையாதவைகளாகும்.
 
அன்னையார் அளித்த அருள்விருந்து
        அன்னையார் பிராம்மணக் குடியில் பிறந்தவர் எனினும், குலாசாரங்களையெல்லாம் அவருடைய பேரன்பு தூர ஒதுக்கி வைத்துவிட்டது. சீர்திருத்தக்காரர்கள் செயற்கையாகவும், பலவந்தமாகவும் செய்கின்ற சில சமுதாயத் திருத்தங்களை அன்னையார் அன்பின் மேலீட்டால் இயற்கையாகவே செய்து முடித்தார். துயரத்தில் தவித்தவர் யாராவது அன்னையாரிடம் சென்று வெறும் கையோடு திரும்பியது கிடையாது. அவரவர் தேவைக்கு ஏற்றபடி உணவோ உடையோ பணமோ கொஞ்சம் பெற்றுக்கொண்டு போவார்கள். தீண்டத் தகாதவர்களென மற்றவர்களால் விலக்கி வைக்கப்பட்டவர்களிடத்திலும் சொந்தம் பாராட்டும் முறையிலேயே அன்னையார் நடந்து கொண்டார்.
        இதனினும் பெரிய மற்றொரு நிகழ்ச்சி நேர்ந்தது. அம்ஜித் என்று அழைக்கப்பட்ட முகம்மதியன் ஒருவன் அன்னையாரைக் காண அடிக்கடி வருவான். அவன் கொண்டுவரும் பழங்களை குருதேவருக்கு நைவேத்தியம் செய்ய அன்னையார் ஏற்றுக்கொள்வார். வங்காள தேசா சாரப்படி அது அடாத செய்கையாகும். மற்ற ஹிந்துக்களுக்கு மனவருத்தம் உண்டு பண்ணக்கூடாதென்றெண்ணி அன்னையார் அம்ஜித்தைத் திண்ணையில் உட்கார வைத்து அன்னமளிப்பார். ஒரு தடவை அவனுக்கு அன்னமளிக்கும்படி தன் தம்பியின் மனைவி நளினியிடம் சொன்னார். அவள் ஜாதி ஒழுக்கத்துக்கு உட்பட்டு எட்ட நின்றுகொண்டு, இலையில் உணவை வீசிப் போட்டாள். அதைக் காணலுற்ற அன்னையார் பெரிதும் வருந்தி, “உடலில் புடைப்பது போன்று அன்னத்தைப் படைக்கிறாய்! உன் செயலால் உனக்கும் துன்பம், உண்பவனுக்கும் துன்பம்” என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் தம் கரத்தாலேயே அம்ஜித்துக்கு அமுது வழங்கினார். அம்ஜித் உணவை அருந்திய பிறகு அவனது எச்சில் இலையை அன்னையார் தாமே அப்புறப்படுத்தினார். இதற்கு பெரிய தடை உண்டாயிற்று. அவர்கள் மறுப்புக்கு விடையாக அன்னையார், “நரேன்(விவேகானந்தர்), ராக்கால்(பிரம்மானந்தர்) முதலானோர் எப்படி என் அருமைச் செல்வர்கள் ஆவார்களோ அதே மாதிரி அம்ஜித்தும் என் அருமைச் செல்வன்” என்று சொன்னார்.


அன்னையாரும் சகோதரி நிவேதிதையும்

   அன்னையாரின் அருளுக்குப் பாத்திரமாக மேல் நாட்டிலிருந்து சகோதரி நிவேதிதை, சகோதரி கிறிஸ்தின், சகோதரி தேவமாதா முதலானோர் இந்தியாவுக்கு தீர்த்த யாத்திரை பண்ணுவது போன்று வந்து சேர்ந்தனர். அவர்கள் கல்வியில் தேர்ச்சி மிகப் பெற்றவர்கள்.  நேர்த்தியான மேல்நாட்டு வாழ்க்கை முறையில் ஈடுபட்டவர்கள் அதற்கொத்த சுகஜீவனங்களையெல்லாம் பொருட்படுத்தாது தெய்வத் தன்மையோடொத்த தன்மை வாய்ந்த இந்தியத் தாய்மார்களின் வாழ்க்கை முறையை அன்னையாரிடமிருந்து கற்றுக்கொள்ள இங்கு வந்து சேர்ந்தவர்கள். அன்னையாரின் கிராமத்துக்குச் சென்று அவர்கள் எளிய குடிசை வாழ்க்கையையும் வாழலாயினர். அன்னையார் அவர்களைத் தம் சொந்த புதல்விகளென வரவேற்றார். ஆசார அனுஷ்டானத்தில், நடையுடை பாவனையில், மொழியில், அடியோடு மாறுபட்ட அவர்களோடு ஆத்மிக வாழ்க்கையையும் பேரன்பையும் ஆதாரமாகக்கொண்ட அன்னையார் மாறாத இணக்கத்தையும் உண்டு பண்ணினார்.



    அக்காலத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணாக்கர் ஒருவர் மந்திரதீக்ஷை பெற்றுக்கொள்ளுதற்காக அன்னையாரிடம் சென்றார். ஞானத்தாயும் அவருடைய விருப்பத்தை முறைப்படி பூர்த்தி பண்ணிவைத்தார். தீக்ஷைக்குப் பிறகு அவரவர் சக்திக்கு ஏற்றவாறு ஏதாவது குருதக்ஷணை படைப்பது வழக்கம். இந்த இளைஞர் புஷ்பம், பழம் ஒரு ரூபாய் ஆகிய இவைகளை தக்ஷணையாக அன்னையாரின் முன் வைத்து வணங்கினார். ஆனால் அன்னையாரோ மலரையும் கனியையும் ஏற்றுக்கொண்டு ‘நான் துறவிகளிடமிருந்து பணம் ஏற்பதில்லை’ என்று ரூபாயை அப்படியே தட்டில் வைத்துவிட்டார். தாம் துறவியல்லரென்றும், கல்லூரி மாணாக்கரென்றும் இளைஞர் அன்னையாருக்கு ஞாபகமூட்டினார். சற்றுச் சிந்தித்துவிட்டு அதே பதிலை மீண்டுமொருமுறை சொன்னார். மாணாக்கர் மீண்டும் தம்மைப் பற்றி எடுத்துச் சொன்னார். மூன்றாந்தடவையும் அன்னையாரிடமிருந்து பழைய விடையே வந்தது. அப்பொழுது சிஷ்யருக்குத் தாம் சன்னியாசியாக வேண்டுமென்று எண்ணம் சிறிதளவும் இல்லை. ஆனால் அவர் மடத்தில் சன்னியாசியாகச் சேர்ந்துகொள்வாராயினார். சுவாமி ஞானேசுவரானந்தர் என்பது அவர் படைத்திருந்த நாமமாகும். அருள்துறையில் அவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அரும்பணி ஆற்றி வந்தார்.
கிரீஷ் சந்திர கோஷ்
      சொப்பனத்தில் தீக்ஷை பெறுவது சாத்தியம் என்று யோகசாஸ்திரம் சொல்வதை அன்னையார் பலதடவைகளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஒரு சம்பவத்தை ஈண்டு உதாரணமாக எடுத்துச் சொல்வோம். துன்மார்க்கத்தில் மூழ்கியவரும், பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரால் தடுத்தாட்கொள்ளப்பட்டவருமான கிரீஷ் சந்திர கோஷ் பரமஹம்ஸர் சரணமடைந்த பிறகும் சாரதா தேவியாரைப் பற்றி விசேஷமாக ஒன்றும் தெரியாதிருந்தார். நெடுநாளைக்குப் பிறகு அவர் பரமஹம்ஸருடைய சன்னியாசி சிஷ்யர் ஒருவருடன் அன்னையைத் தரிசிக்க ஜெயராம்பாடிக்குச் சென்றார். பாதத்தில் விழுந்து வணங்கிய பின் அன்னையாரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். உடல் சிலிர்க்கும் நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. உடனே வெளியே சென்று கன்னத்தில் கைவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். உடன் வந்த சகோதர சீடர், கிரீஷர் அவ்வாறு நடந்துகொண்டதற்குக் காரணம் யாது என்று அவரைப் பின்தொடர்ந்து போய்க் கேட்டார். “எனக்கு 19 வயதில் நான் சாகப்போகும் தருவாயில் இருந்தபொழுது சொப்பனத்தில் தோன்றி மருந்தூட்டி, என்னை உய்வித்தது இந்த அம்மையார் அல்லவா? சென்று கேளுங்கள்...” என்றார் கிரீஷ் சந்திர கோஷ். கோஷருடைய ஐயம் அன்னையாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அது முற்றிலும் உண்மை என்று ஒத்துக்கொண்டார். பிறகு கிரீஷர் இங்ஙனம் இயம்பினார்:- “அப்பொழுது தீராத நோய் ஒன்று என்னை வாட்டிக்கொண்டிருந்தது. மருத்துவர்களெல்லாரும் கைவிட்டுவிட்டனர். சொப்பனத்தில் தேஜோமயமான ஆகாயத்தினின்று, தேவதை போன்ற பெண் ஒருத்தி என் முன் தோன்றினாள். எனக்கு அப்பொழுது ஈசுவர விசுவாசம் கிடையாது. ‘மகனே, நீ வருந்துகின்றாய் அல்லவா? இதைச் சாப்பிடு’ என்று சொல்லி அவள் என் வாயில் ஏதோ ஒன்றை போட்டுவிட்டு மறைந்தாள். நாவுக்கினிய அதை நான் அருந்தினேன். அதினின்று நானும் குணமடைந்தேன். அதே மங்கைதான் இந்த அம்மை என்பதை நான் இப்பொழுது கண்டுகொண்டேன்”. மேலும் தமது ‘அன்னை’யைத் தமக்குக் காட்டிக்கொடுத்தவர் தம்மையும் ஆங்கு அழைத்துச் சென்ற சன்னியாசி என்று அவரையும் கிரீஷர் மிக மெச்சினார்.
சுவாமி விவேகானந்தர்
       அன்னையார் பெற்ற மற்றோர் அரிய அனுபவம் குறிப்பிடத்தக்கது. பிரம்மவாரி என்று சொல்லப்படுகிற கங்கா நதியினுள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சென்று லயமானதாகவும் சைதன்ய சொரூபமாகிய அத்தகைய புண்ணிய தீர்த்தத்தை ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் மோந்தெடுத்துப் பாரெங்குமுள்ள மானுடர்மீது தெளித்ததாகவும் அவர் ஞானக்காட்சியில் கண்டார். இந்த அனுபவம் அன்னையாரின் மனத்தை அடியோடு கவர்ந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணரே கங்கா சொரூபமாக மாறியதைக் கண்டதனால் அந்நதியுனுள் கால் வைக்க அன்னையார் தயங்கினார். ஞானத் தாய்க்கு இக்காட்சி தென்பட்ட பின்பே ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தர் உலகெங்கும் தர்மப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். உலகத்தவரைப் புனிதப்படுத்துவதற்கே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தரும் அவதரித்தனர் என்பது அன்னையாருக்கு ஞானக்காட்சியில் விளங்கிற்று.

பூத உடல் நீத்துப் பொன்றா உடல் புகுதல்
வெளிப்பார்வைக்கு மற்ற மங்கையர்களைப் போன்று அன்னை ஸ்ரீ சாரதா தேவியும் தென்பட்டார் எனினும் அவரிடத்துத் தனித் தெய்வத் தன்மை ஒன்று திகழ்ந்துகொண்டிருந்தது. பெற்ற தாயுடன் உறவாடுவதைவிடத் தாராளமாய் அவருடன் உறவாடலாம். அத்தகைய சுதந்திரத்துக்கிடையில் தெய்வ சந்நிதியில் இருக்கிறோம் என்ற எண்ணமும் சேர்ந்தே உண்டாகும். மிகைப்படப் பேசுதல் அன்னையாரிடம் கிடையாது. அடங்கிய, அமிழ்து போன்ற இனிய குரலில் சில சொற்களே அவரிடமிருந்து வெளிவரும்; அவை யாண்டும் உயிரும், அருளும், பொருளும் நிறைந்த சொற்களாகும்.
            இறுதியாக அன்னையார் தொடர்ந்து ஓராண்டு தம் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அத்துடன் அவருடைய கிராம வாசம் முடிவுபெற்றது.  1920ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் மெலிந்த திருமேனியுடன் அவர் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார். மண்ணுலகில் அவருடைய வாழ்க்கை முடிவு பெறுவதன் அறிகுறிகள் தென்பட்டன. அன்னையாரின் திருமேனி மறைதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்று நேர்ந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த அவரது அறைக்குள் யாரும் போய் இடத்தை அடைத்துக்கொள்ளலாகாது என்ற கட்டளை பிறந்திருந்தது. அவரைப் பார்க்க வந்த அன்னபூரணம்மாள் என்னும் மாது ஒருத்தி உள்ளே அமர்ந்துகொண்டு இங்ஙனம் எண்ணினாள்:- “அன்னையாரின் பூலோக வாழ்க்கை நிறைவுபெறப் போகிறது. இனி இந்தப் பாழுலகில் நம்முடையது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? எங்கள் கதி என்னாகுமோ?” படுக்கையில் திரும்பிப்படுத்த தாயார் இவளைக் கண்டு அருகில் வரும்படி சைகை செய்தார். வணங்கி முழந்தாளிட்டவளின் தலையைத் தடவிக்கொடுத்து, உறுதியான குரலில் அன்னையார் இவ்விதம் இயம்புவாராயினர்:- “மகளே, உனக்கு மனவமைதி வேண்டுமானால் உலகத்தவர் மீது குறை கூறாதே, மற்றும் உன்னிடத்திலுள்ள குற்றத்தையே கிளறிப்பார். உலக முழுவதையும் உன்னுடையதாக்கக் கற்றுக்கொள். நமக்கு உரியவர் என்றும் உரியவரல்லாதவர் என்றும் சொல்லும் வேற்றுமை நிலைமையில் யாருமில்லை. உலகனைத்தும் நமதே, இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்”. உடலை உகுக்கும் முன்பு அன்னபூரணம்மாள் மூலமாக உலகனைத்துக்கும் அன்னையார் கொடுத்த கடைசிச் செய்தி இதுவே.
உத்போதனில் வழிபாடு செய்யும் அன்னையார்
நஹபத் தென்புறத்தோற்றம் - இங்கே கீழ்தளத்தில் அன்னையார் வாழ்ந்தார்.       
நஹபத் உட்தோற்றம் - அன்னையார் வாழ்ந்த இடம்.
  பல்லாண்டுகளாகத் தமது தோழிமார்களாக இருந்த கொலாப் அம்மையையும், யோகினி அம்மையையும் அந்திய காலம் வரையில் நன்கு ஆதரிக்கவேண்டுமென்று ஸ்ரீமத் சாரதானந்த சுவாமிகளிடம் அன்னையார் ஆக்ஞாபித்தார். பிறகு குழுமியிருந்த சிஷ்யர்களையெல்லாம் அவர் கண்குளிரப் பார்த்து, மனமுவந்து ஆசீர்வதித்தார். மனது அந்தர்முகமாகத் திரும்பியது. இருள்படிந்திருந்த முகத்தில் இப்பொழுது தெய்விக எழில் வீசிற்று. அந்நிலையில் பிராணனும் அடங்கியது. 1920ஆம் வருஷம் ஜூலை மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பூத உடல் நீத்துப் பொன்றா உடல் எய்தினார். தக்க சடங்குகளுடன் தேகம் பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் கங்கைக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. ஞானிகளின் தேகத்தை தகனம் செய்வது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் ஐதிகமாகும். தகனம் செய்யப்பட்ட இடத்தில் அன்னையாருக்குக் கட்டுவிக்கப்பட்ட சிறிய ஆலயம் ஒன்று மடத்தை அலங்கரித்துக்கொண்டு நிற்கிறது.

அன்னையாரின் அன்பு
      முறை தவறி நடந்துகொண்டதற்குச் சிட்சையாக சிஷ்யன் ஒருவனை அன்னையாரின் முன்னிலையில் போகலாகாதென்று சிலர் தடுத்துவிட்டனர். இதைக் கேட்ட அன்னையார், “என் குழந்தை சேற்றில் விழுந்துவிட்டால் அவனை எடுத்துக் குளிப்பாட்டித் தூயவனாக்கி என் மடியில் அமர்த்துவது என் கடமை அவனை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று கருணை கூர்ந்து கூறினார். தண்டனையைவிட அன்னையாரின் அன்பே அவனை அதிவிரைவில் சீர்திருத்தியது.

(ஸ்ரீ சாரதா தேவியாரின் பிறந்த தினமான இன்று அவரை நினைவுகூறும் விதமாக இந்த கட்டுரை பதிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய ‘ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. குறைகளும், சொல்லாத இன்னும் பல நிகழ்ச்சிகளும் இதில்  நிறைய உள்ளன. படிப்பவருக்குத் திகட்டாவண்ணம் கொடுக்க முயன்றதே அதற்குக் காரணம் ஆகும்.)

No comments:

Post a Comment