Sunday, June 24, 2012

*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 1


தவம் புரிந்து பெற்ற பிள்ளை
Kali Ghat Temple - 1887
பரத கண்டத்திலே கங்காதீரத்திலே காளிகாதேவியின் திருக்கோயில் ஒன்றுண்டு. முன்னாளில் காளிக்கட்டம் என்று அழைக்கப்பட்ட அவ்வூரானது ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குத் தலைமைப்பட்டணமாகிய பின்பு, புதிய மேம்பாடுகள் பல அடைந்து, கல்கத்தா என்ற திரிவுபட்ட நாமகரணம் பெறலாயிற்று.
அந்நகரிலே சென்ற நூற்றாண்டிலே விசுவநாத தத்தர் என்ற க்ஷத்திரிய வமிசத்துதித்த பெரியார் ஒருவர் வசித்து வந்தார். இயல்பாகவே அவர் படைத்திருந்த பேரறிவை அவர் பயின்ற கல்வியானது மேலும் ஓங்குவித்தது. கல்கத்தா நீதிமன்றத்திலே அவர் ஒரு நியாயவாதியாயமர்ந்து செல்வம் மிகச் சம்பாதித்து, அப்போதைக்கப்போது நல்வழியில் செலவிட்டு வந்தார்.
புவனேஸ்வரி மாதா
புவனேஸ்வரி மாதா என்ற அம்மையார் விசுவநாத தத்தருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்து இல்லறம் நடாத்தி வந்தார். சதுர் வேதங்களுக்குச் சமனாய் விளங்குகின்ற இராமாயணம், மஹாபாரதம் என்னும் இவ்விரண்டு இதிகாசங்களையும் புவனேசுவரி மாதா காவிய ரூபமாக மனப்பாடம் பண்ணியிருந்தார். புதல்விமார் இருவரை ஈன்றெடுத்து அன்புடன் அவர்களை ஆதரித்து வளர்த்து வந்ததற்கிடையிலே தாம் ஒரு விதத்தில் தௌர்ப்பாக்கியவதியாய்விட்டதாக எண்ணி, இவர் சிறிது வாட்டமுற்றிருந்தார். மக்கட்பேற்றிலும் ஆண்மகவையன்றோ இல்லறத்தார் பெரிதும் விரும்புவது! சத்புத்திர பாக்கியம் தமக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர் அல்லும் பகலும் அஞ்சலி ஹஸ்தராய்த் தாம் வணங்கும் கடவுளாகிய காசிவிசுவநாதர் பால் குறையிரந்து வேண்டி வந்தார்.
இம்மையிலும் மறுமையிலும் தமக்கு இன்பம் துய்ப்பிக்கவல்ல ஆண் மகவு ஒன்றைத் தந்தருளும்படி இப்புனிதவதி செய்த பிரார்த்தனைக்கு இரங்கினார் இறைவன். புவனேசுவரி மாதா கர்ப்பவதி ஆனார். இறைவனை வழுத்தி வந்த நாட்களைக் கதிரவன் கணக்கிட்டுக்கொண்டே போக, அன்னையில் வயிற்றில் வளர்ந்துவந்த சிசு பூமியில் ஜனிக்கும் காலம் வந்தது. கி.பி. 1863வது ஆண்டில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி, தை மாதம் முதல் நாளாகிய மகர சங்க்ராந்தியன்று உலகெங்கும் கீர்த்தி பெறுதற்கிருந்த மகாபுருஷர் பிறந்தார்.

நரேந்திரர் பிறந்த வீடு, கல்கத்தா
பெயர் சூட்டுதல்:
புதிதாக பிறந்திருந்த பிள்ளையின் அங்க அமைப்பு நெடுநாளைக்கு முன்பு லௌகிக வாழ்வை நீத்துத் துறவறம் பூண்டு வெளியேகிய பாட்டனார் துர்க்காசரண தத்தரது திருமேனியை முற்றும் ஒத்திருந்தது. நாமகரணம் சூட்டும் பருவமும் வந்தது. பாட்டனாரின் பெயரையே வைத்துவிடலாமா என்ற எண்ணம் வந்தது; அல்லது சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றாகிய வீரேசுவரன் என்னும் பெயரை வழங்கிவிடலாமா என்ற எண்ணமும் தோன்றியது. கடைசியாக இம்மகவு பிறந்த நாளுக்கும் நட்சத்திரத்துக்கும் ஒப்ப நரேந்திரநாதன் என்ற நாமம் சூட்டினார்கள்.
நரேந்திரனின் துஷ்டத்தனம்:
இப்பாலகன் மூன்று வயதுப் பிள்ளையாயிருந்தபோதே இவன் செய்யத்தொடங்கிய சேஷ்டைகளுக்கு ஓரளவில்லை. நினைத்த மாத்திரத்தில் குடும்பத்தில் பெருங்குழப்பத்தை விளைவித்துவிடுவதுமல்லாமல் வீட்டார் அனைவரும் இவனை முன்னிட்டுக் கவலையுறும்படியும் செய்துவிடுவான். தாய் தந்தையர்கள் இவனை எவ்வளவுக்கெவ்வளவு மிரட்டினார்களோ அவ்வளவுக்கவ்வளவு இவனுடைய துடுக்கும் துணிவும் அதிகரித்தன. தண்டனைக்கு இவன் சிறிதேனும் அஞ்சினவனல்லன். துஷ்டத்தனம் நிறைந்த நரேந்திரனை வசப்படுத்துவதற்கு வழி  ஒன்றே ஒன்றுதானிருந்தது. அதாவது இவன் மூர்க்கத்தனமாய் நடந்தபோதெல்லாம் அன்னையார் இவனை நீர்க்குழாய்க்கடியில் நிறுத்திவிட்டுத் தண்ணீர் இவன் தலை மீது சதா வீழ்ந்து கொண்டிருக்கும்படி செய்து விடுவார். பொழியும் புனலின் கீழ்மட்டும் இவன் நெடுநேரம் சாந்தமாக சும்மா இருப்பான். சிறுவனுடைய மூர்க்கத்தனத்தையும் பிடிவாதத்தையும் பார்க்கச் சகியாத தாய், “பிள்ளைவரம் வேண்டிச் சிவபிரானிடம் தவமிருந்த எனக்கு அவன் தன் பூத கணங்களில் ஒன்றை அனுப்பியிருக்கிறான்; என் செய்வேன்?” என்று தனது மனச்சலிப்பை வெளியிடுவார். தன் தமக்கைமார் இருவரையும் நரேந்திரன் அலைக்கழித்தது இவ்வளவு என்று சொல்லித் தொலையாது. அவன் விளைவித்த தொந்தரவைத் தாங்க முடியாத அச்சிறுமிகள் அவனைப் புடைக்க ஓடி வந்தால் அவன் விரைந்தோடிச் சாக்கடையில் நின்றுகொண்டு, “என்னை வந்து அடியுங்கள்” என்று எரிச்சலூட்டுவான். அசுசியான சாக்கடைக்கு அப்பெண்கள் எப்படிச் செல்வார்கள்? ஆனால் துடுக்கே வடிவெடுத்து வந்த அச்சிறுவனுக்கு மட்டும் சுசி என்பது அசுசி என்பதும் இம்மியளவும் இல்லை.
நரேந்திரரின் சகோதரி ஸ்வர்ணமயி தேவி
நரேந்திரனின் ஈதல் குணம்:
வறியோர்களிடத்திலும் சாதுக்களிடத்திலும் நரேந்திரன் காட்டிய அனுதாபத்துக்கும் அன்புக்கும் ஓரளவில்லை. அவர்கள் தன் வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டால் கைக்குக் கிடைத்தவைகளையெல்லாம் எடுத்து அவன் அவர்களுக்கு வழங்கிவிடுவான். இரந்தார்க்கு இல்லையெனாது ஈதல் தத்தர் குடும்பத்தில் ஒரு தனிப்பெருமை எனினும், நரேந்திரன் போனபோக்கில் அவனை விட்டிருந்தால் வீடு ஒரே நாளில் வெறும் பொட்டல் காடாய் மாறியிருந்திருக்குமன்றோ? ஆதலால் யாசகர்கள் வந்தபோதெல்லாம் வீட்டார் அனைவரும் பையனைப்பற்றி மிக எச்சரிக்கையாயிருந்தார்கள். சின்னஞ்சிறுவனாயிருந்தபோது அவன் தன் கைக்கு அகப்பட்ட பொருள்களையெல்லாம் எடுத்து அவைகளை வேண்டுகின்ற வறிஞர்களுக்கு வழங்குவானாயினன். பிற்காலத்தில் அவன் ஒரு பரமாச்சாரியன் ஆன பிறகு அருளை அள்ளி வையகமெங்கும் வழங்கலாயினன். வையகத்து அவன் வழங்கியவாறு வேறு யார்தான் அருளை வழங்கியிருக்கிறார்கள்!
ராம பக்தி:
பெரியோர்கள் பெற்றிருந்த பெருமையில் பெரும்பகுதி அவர்கள் தம் தம் அன்னையாரிடமிருந்து பெற்றதன்றோ! புவனேசுவரி மாதா புகட்டிய கல்வியும், அதை நரேந்திரன் கிரகித்த விதமுமே அவன் தனது வாழ்வில் அடைந்த மேன்மைக்கு முக்கிய காரணமாயிற்று எனலாம். பிள்ளையை மடியிலமர்த்திக்கொண்டு இராமாயணக் கதையைத் தாய் எடுத்துச் சொல்லுவாள். கற்பனாசக்தி மிக வாய்க்கப்பெற்றிருந்த அம்மையார் இராமபிரானது ஆண்மையையும் சீதாபிராட்டியாரின் தூய்மையையும் எடுத்து வருணித்தது பிள்ளையின் உள்ளத்தை அடியோடு கவர்ந்துவிட்டது. சீதாராமனது விக்ரகம் ஒன்றை விலைக்கு வாங்கி வந்து அதன் மூலம் நரேந்திரன் கடவுளை வழிபடத் தொடங்கினான். இவ்வழிபாட்டில் தனக்குக் கூட்டாளியாக பிராமணப்பிள்ளை யொருவனையும் சேர்த்துக்கொண்டான்.ஒரு நாள் வீட்டின் மேல்மாடி அறைக்குள் சென்று இருவருமாக கதவைத் தாழிட்டுக்கொண்டு ஸ்ரீ சீதாராம விக்ரகத்துக்கு அலங்காரம், பூஜை முதலியவற்றை செய்துவிட்டு தியானம் பண்ண அமர்ந்துவிட்டார்கள். பிள்ளைகளைக் காணாமல் இரு வீட்டாரும் கடைசியாக மேல் மாடிக்கு வந்தார்கள். பெற்றோர்கள் திகைத்து கதவை பலவந்தமாக உதைத்துத் தள்ளினார்கள். இந்த ஆரவாரத்தில் நண்பன் தண்டனைக்கு ஆளாவோம் என்று எண்ணி ஓட்டம் பிடித்துவிட்டான். இந்த இரைச்சலொன்றும் நரேந்திரன் காதில் விழவில்லை. அவன் நிஷ்டையில் அமர்ந்திருப்பது பார்த்தோருக்கு பெருவியப்பையூட்டியது.
ராம பக்திக்கு முக்தி!:
நரேந்திரன் நினைத்தபொழுதெல்லாம் அவர்களுடைய வீட்டு வண்டிக்காரனிடம் உறவாட ஓடிவிடுவான். ஒரு நாள் வழக்கம்போல் வண்டியோட்டுபவனோடு நரேந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது விவாகத்தைப்பற்றிய பேச்சும் எழலாயிற்று. வண்டிக்காரன் விவாகத்தை வெறுத்துப் பேசியது பாலன் நரேந்திரனது உள்ளத்தில் பசுமரத்தாணி போல பதிந்தது. சீதையும் ராமனும் மணம் புரிந்திருந்தார்களல்லவா? விவாகத்தின் பயனாக அவர்களுக்கு நேர்ந்த விபத்துக்கள் எத்தனை? துயரங்கள் எத்தனை? சம்சார பந்தத்தில் கட்டுண்டிருந்தவர்களைக் கடவுளாக வணங்கலாமா? என்று எண்ணி ஆறாத் துயரத்தில் அழுந்தி அன்னையிடம் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். விம்மி விம்மி மொழி குளறினவனாய் நரேந்திரன் நடந்தவற்றைக் கூறினான். தான் வணங்குதற்கேற்ற வேறு தெய்வம் இல்லையேயென்று துயருற்றான். புவனேஸ்வரி மாதா சேயின் மனப்பாங்கை ஊகித்து, “நமது குலதெய்வமாகிய துறவிவேந்தன் காசி விஸ்வநாதனிருக்க நீ விசனப்படுவானேன்?” என்று ஆறுதலளித்தார். அவன் உடனே மேல் மாடிக்கு விரைந்தோடி சீதாராமனது விக்கிரகத்தை வீதியிலே விட்டெறிய அது வீழ்ந்து சுக்கலாயிற்று. மறுநாள் காலையில் கடைக்குச் சென்று சிவபெருமானது விக்கிரகம் ஒன்றை விலைக்கு வாங்கி வந்து காலியாயிருந்த வழிபாட்டுக்குரிய இடத்திலே அமர்த்தினான்.
யோக நித்திரை:
நரேந்திரனின் நித்திரை ஏனையவர்களுடையது போன்றதன்று. அவன் படுக்கையில் சயனித்துச் சோர்வுறுந்தருணத்திலே உருண்டை வடிவான ஜோதியொன்று தன்னை நோக்கி நகர்ந்து வருவதைக் காண்பான். அப்பேரொளியில் கலந்து மெய்மறந்துவிடுவதுதான் அவனது துயில். இந்த யோக நித்திரையானது அவனது மூன்றாம் பிராயத்திலிருந்து ஆயுள் பரியந்தம் அவனுடன் நீடித்திருந்தது. துயிலுறுகின்ற ஒவ்வொருவனும் தன்னைப் போலவே ஜோதியில் லயமாகின்றானென்று இச்சிறுவன் நெடுநாளாக எண்ணி வந்தான். பிறகு இதைப் பற்றிப் பள்ளிக்கூடப் பிள்ளையொருவனுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் அது தனது தனியனுபவமென்று நரேந்திரன் அறியலானான். பிற்காலத்தில் அவனை ஆட்கொண்ட குருநாதர் ஒருவர் மட்டும் அவனுடைய இந்த அனுபவத்தை ஞான திருஷ்டியால் முன்னதாக அறிந்து, இதைப்பற்றி அவனுடன் உரையாடினார்.
வலது புருவத் தழும்பு:
ஒருநாள் நரேந்திரன் சில சிறுவர்களோடு மேல்மாடியில் குதித்தோடி விளையாடிக்கொண்டிருக்கையிலே, படிக்கட்டினின்று அடிதவறித் தலைகீழாக உருண்டு தரையிலே வீழ்ந்து மூர்ச்சையடைந்துவிட்டான். உயிருக்கே அபாயம் வந்துவிட்டதோவென்று மருண்டுபோன அவர்கள், அக்கணமே மருத்துவன் ஒருவனை அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைக் கையாண்டார்கள். கொஞ்ச நேரத்தில் நரேந்திரன் மூர்ச்சை தெளிந்தெழ, பெற்றோர்கள் கவலையினின்று சிறுது தேறினார்கள். ஆனால் இந்த விபத்தின் பயனாக இவனது வலது புருவத்தில் பெரிய தழும்பொன்று காணப்பட்டு வந்தது. “இந்த ஆபத்தின் வாயிலாக இவனது சக்தியில் பெரும்பகுதி அன்னை பராசக்தி கரந்தெடுத்துவிட்டாள். அவ்வாறு நிகழாதிருந்திருக்குமாயின், இவன் இவ்வுலகையே அருட்சக்தியால் கலக்கிவிட்டிருப்பான்!” என்று பிற்காலத்தில் பரமஹம்சர் பகர்ந்தார். எனினும் அவன் உலகை ஓர் ஆட்டு ஆட்டித்தான் வைத்தான் என்பது வெளிப்படை.
நரேந்திரனின் ஞாபக சக்தி:
வீட்டிலேயே நியமிக்கப்பட்ட ஓர் உபாத்தியாயரிடம், குறிப்பிட்ட சில பிள்ளைகளுடன் ஞாபக சக்தி எத்தகையதென்பதை அப்போது ஆசிரியர் அறிந்திலர். அவர் பாடம் புகட்டியபோதெல்லாம் கண்ணைச் சிறிது மூடிக்கொண்டு தியானாவஸ்தையிலிருந்து அதைக் கேட்டுக் கிரகித்து வருவது இவனது வழக்கம். ஆனால் உபாத்தியாயர் இவனை மந்தனென்றும், தூங்குமூஞ்சிப் பயலென்றும் கருதி வந்தார். தூங்குகிறவன் போலக் காணப்பட்ட இப்பிள்ளையை ஒரு தடவை உபாத்தியாயர் கோபாவேசத்துடன் தட்டியெழுப்பினார். விழித்துப் பார்த்த நரேந்திரன் அவரது முகத்திலே சினக்குறியிருந்ததைக் கண்டு வியப்புற்றான். தான் தூங்கவில்லை என்பதை நிரூபித்தற்பொருட்டுச் சென்ற ஒரு மணிநேரம் அவர் சொல்லி வந்ததையெல்லாம் அப்படியே ஒப்பித்தான். இதுபோன்ற ஞாபக சக்தி ஒருவனிடம் இருக்கக்கூடுமென்பதை அந்த உபாத்தியாயர் இதற்குமுன் கனவிலும் கருதியதில்லை. அது முதல் நரேந்திரன்மாட்டு அவர் அன்பும் மரியாதையும் வைக்கலானார். ஓராண்டுக்குள்ளாக இப்பிள்ளை சம்ஸ்கிருத நிகண்டாகிய அமரகோசத்தை மனப்பாடம் பண்ணிவிட்டான். தேவபாஷையெனப் பகரப்படும் சம்ஸ்கிருதத்தில் அவனுக்கிருந்த பற்றுதல் அளவிடவொண்ணாதது.
“எதற்கும் அஞ்சாப் பிசாசு”:
உயர்தரப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டபோது அங்கும் பிள்ளைகள் அனைவருக்குமிடையே நரேந்திரன் மிகுந்த சுறுசுறுப்புள்ளவனாயிருந்தான். பரபரப்பு மிகுதியால் ஒரு நாளைக்கு ஒரு சட்டை அல்லது வேட்டியைக் கிழித்துவிடுவான்; எந்த விளையாட்டானாலும் அதிக உக்கிரத்துடன் அவன் விளையாடுவான்; எதற்கும் அஞ்சாப் பிசாசு என்று அவனைச் சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்புக்குப் போனபோது நரேந்திரன் ஆங்கிலம் கற்கவேண்டியது அவசியமாயிற்று. ஆனால் அது அன்னியநாட்டு மொழியென்று அவன் அதைப் படிக்க அறவே மறுத்துவிட்டான். யார் என்ன சொல்லியும் அவன் அதற்குச் செவி சாய்க்கவில்லை; சில மாதங்களுக்குள்ளாக அப்பாஷையைப் பயில வேண்டிய அவசியத்தை அவன் தானாக உணர்ந்துகொண்டான். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது அவனிடம் அமைந்திருந்த பேரியல்பாம். ஆதலால் இப்போது முழுமனதுடன் ஆங்கிலம் படிக்க அவன் ஆரம்பித்துவிட்டான். சுவாமி விவேகானந்தர் உலகனைத்துக்கும் உவந்தளித்த அருட்செய்தி ஆங்கிலம் வாயிலாக அல்லவோ வழங்கப்பட்டது.
கல்லூரிப் பிரவேசம்:
நரேந்திரன் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந்த போது தத்தர் குடும்பமானது மத்தியமாகாணத்திலுள்ள ரெய்ப்பூருக்குக் கொஞ்சகாலம் போகவேண்டி நேர்ந்தது. வீட்டாரோடு அவனும் வெளியூருக்குப் போக வேண்டியிருந்தமையால் அவனது படிப்புக்குச் சிறிது தடை ஏற்பட்டது. ரெய்ப்பூரில் ஆண்டுகள் இரண்டு கழிந்தன. பள்ளிக்கூடத்தில் முறையாகப் பயிலவேண்டிய படிப்புக்குப் பெருந்தடை விளைந்திருந்தமையால், கல்கத்தா திரும்பியபோது நரேந்திரனைக் கல்லூரிப் பிரவேசப் பரீட்சையில் சேர்த்துக்கொள்ளுதற்கு ஆட்சேபம் மிக உண்டாயிற்று. எனினும் அவனுடைய பொது அறிவையும், ஆற்றலையும் காரணமாகக்கொண்டு கல்வி இலாகா நிபந்தனைகளினின்று அவனுக்கு விலக்கு செய்தது. மூன்று வருஷங்களில் பயிலவேண்டிய பாடங்களை எல்லாம் ஒரே வருஷத்தில் அவன் கற்கவேண்டியிருந்தது. அல்லும் பகலும் அதிசிரத்தையுடனே படித்துப் பரீட்சையில் முதல் இடம் வகித்துத் தேர்ந்ததுமல்லாமல் தனது பாட சாலைக்கே அவ்வாண்டு தனிப்பெருமையைத் தேடி வைத்தான்.
கல்வி ஞானமும், வேடிக்கை விநோதங்களில் ஞானமும்:
கல்லூரி படிப்பிலே பிரவேசித்ததும் நரேந்திரனது மனப்பாங்கு அறவே மாறிவிட்டது. பிள்ளைப் பருவத்தில் வேடிக்கை விநோதங்களில் காலங்கழித்தது போன்று இப்போதும் கழிக்க அவனுக்கு அவகாசமில்லை. பாடப் புத்தகங்களைத் தவிர மெய்யறிவூட்டும் வேறு சில புத்தகங்களையும் அவன் படிக்கத் தொடங்கினான். வங்காளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தத்துவஞானம், தர்க்கம், தேச சரித்திரம் முதலியவைகளில் அவன் எய்திருந்த மேம்பாட்டைக் காணலுற்ற கல்லூரியாசிரியர்கள் மிக வியப்படைந்தார்கள். மாணாக்கனாயிருந்தபோதே அவன் படைந்திருந்த வாக்குத் திறமையை அக்காலத்தில் நாவன்மையில் இணையற்றவரெனப் பிரசித்தி பெற்றிருந்த சுரேந்திரநாத பாணர்ஜி கண்டறிந்து அவனைப் பெரிதும் புகழ்ந்து பேசியுள்ளார். வாலிபர்களிடம் இன்றியமையாது இருக்க வேண்டிய குதூகலமும், வேடிக்கை விநோதங்களில் பற்றும் நரேந்திரனிடத்து வேண்டியவாறு அமைந்திருந்தன. சந்தர்ப்பத்துக்கேற்றா நகைச்சுவைப் பொலியும் சொற்களைச் சொர்ந்து, கேட்போர் விலாப்புடைக்கச் சிரிக்கும்படி அவன் செய்துவிடுவான். ஆதலால் மாணவர்களது கூட்டமொன்று எப்போதும் இவனைச் சூழ்ந்துகொண்டேயிருக்கும்.
சங்கீத ஞானமும், தேகப் பயிற்சியும்:
லலித கலை ஞானங்களில் சிறந்ததொன்றாகிய சங்கீதத்தில் அவன் தேர்ச்சி மிகப்பெற்று வந்தான். கலாசாலையில் ஒரு நாள் சுமார் இருநூறு மாணவர்கள் அடங்கியிருந்த வகுப்புக்கு அதன் ஆசிரியர் வரச் சிறிது கால தாமதமாய்விட்டது. அப்போது நரேந்திரன் ஒரு பாட்டுப்பாடி மாணாக்கர்களை மகிழ்விக்க வேண்டுமென்று அனைவரும் வேண்டினார்கள். அவனும் அக்கணமே இனிய கம்பீரமான குரலிலே பாடினதை எல்லாரும் மனம் குவிந்து நிசப்தமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆசிரியரும் பாட்டு முடியும் வரை வெளியிலிருந்து கேட்டு அனுபவித்துவிட்டு மலர்ந்த முகக் குறியுடன் கூடத்தினுள் பிரவேசித்தார். பாடத்தைப் போதிக்கத்துவக்குவதற்கு முன் அவர் கான ரசத்தை மிகவும் போற்றினார். சங்கீதத்தை கசடறக் கற்றுக் கொள்ளுதல் பொருட்டு சங்கீத வித்வான்கள் இருவரது உதவியைக்கொண்டு வீணை, மிருதங்கம் முதலிய கருவிகள் வாசிக்கவும் ராகங்கள் பாடவும் பயின்று வந்தான்.
(Swamiji sang well and had learned the Indian Classical music from his father as well as renowned singers of the day like, Pt. Beni Adhikary and Ustad Ahammad Khan. He even wrote poetry for which he often composed music himself. Swamiji quite often played several musical instruments like tabla, khol and tanpura.)
நரேந்திரர் வாசித்த இசைக்கருவிகள்
தேகப் பயிற்சிகளுள் சிலம்பம் சிறந்ததோர் வித்தை. நானாவித தேகப் பயிற்சிகளிலும் பந்து விளையாட்டுக்களிலும் நரேந்திரன் தேர்ச்சி பெற்றிருப்பது போலவே சிலம்ப வித்தையிலும் தேர்ந்திருந்தான். தேக வலிமையிலே சிறந்தவர்களையும்கூட இவ்வித்தையினால் தோற்கடிக்கவல்ல சில மர்மங்களை நரேந்திரன் கற்றிருந்தான்.
நாடகக் கலையில் நரேந்திரன் எத்தகைய மேம்பாடு பெற்றிருந்தான் என்பதை அவனது நடிப்பைக் கண்டவர்கள் அறிவார்கள்.
ஆண்டுதோறும் பரீட்சைக் காலம் அணுகும்போதுதான் நரேந்திரன் தனது முழுமனதையும் பாடப் புத்தகங்களில் செலுத்துவான். நரேந்திரன் பரீட்சைகளில் சிறப்புடன் தேர்ந்து B.A. பட்டதாரியும் ஆனான். பின்பு அவன் சட்டக் கலாசாலையில் வழக்கறிஞர் உத்தியோகத்துக்குப் படித்துக் கொண்டிருந்தான். ஆனால், B.L. பட்டம் பெறுதற்கு முன்பே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரால் ஆட்கொள்ளப்பட்டமையால் சட்டப் படிப்பை அவன் பூர்த்தி பண்ணவில்லை.
மஹேந்திரநாத தத்தர்
(நரேந்திரரின் இளைய சகோதரர்)
பூபேந்திரநாத தத்தர்
(நரேந்திரரின் இளைய சகோதரர்)
ரகுமணி தேவி (புவனேஸ்வரி மாதாவின் தாயார்)
 (இதன் தொடர்ச்சி 26.06.2012, செவ்வாய்க் கிழமை அன்று இடம்பெறும்.) 


No comments:

Post a Comment